மின்கம்பத்தில் ஏணி உரசியதில் துடிக்க துடிக்க பறிபோன 4 பேரின் உயிர்! பதறவைக்கும் காணொலி

கன்னியாகுமரி மாவட்டம் அந்தோணியார் ஆலய திருவிழாவில் நேற்று மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உடல்கள் அனுப்பிவைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் பகுதியில் இனையம் புத்தன்துறை என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்குள்ள அந்தோணியார் தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர் செல்லும் பகுதிகளில் தேர் செல்ல தடையாக உள்ள பொருட்களை அகற்றும் பணியும், அலங்காரம் மேற்கொள்ளும் பணியும் இன்று நடைபெற்றது. இதற்காக, சக்கரங்களுடன் கூடிய உருட்டி செல்லும் வகையில் அமைந்துள்ள 30 அடிக்கு மேல் உயரம் கொண்ட இரும்பு ஏணியை பயன்படுத்தி, பக்தர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை ஏணியை தேவாலயம் முன்பிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றபோது அங்கு சென்ற 11 கேவி உயரழுத்த மின்கம்பில் ஏணி உரசியது. இதில் மின்சாரம் ஏணியில் பாய்ந்து ஏணியை உருட்டி சென்ற இனையம் புத்தன்துறையை சேர்ந்த மீனவர்களான விஜயன், மைக்கேல் பின்றோ, ஜஸ்டஸ்,சோபன், ஆகிய 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் 4 பேரும் ஏணியை விட முடியாததால் உடல் கருகினர்.
Sensitive Visuals⚠️
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) March 1, 2025
மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாப பலி
கன்னியாக்குமரி மாவட்டம் - இனயம் புத்தன்துறையில் கோவில் திருவிழாவின் போது மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலி pic.twitter.com/6ORvoieP2B
அவர்களின் உடல் மீது தீப்பொறி பற்றியதால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், பெண்கள் கதறி அழுதனர். பொதுமக்கள் கூடி அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மின்சாரம் பாய்ந்ததால் யாரும் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. ஏணியில் சிக்கிய 4 பேர் மீதும் தீப்பொறி பற்றி எரிந்ததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதனால் 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்த நான்கு பேர் உடல்களும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டுவரப்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னாள் பாஜக ஒன்றிய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர் மேலும் பிரேத பரிசோதனைக்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள மருத்துவர்கள் ஆட்சியர் அறிவுறுத்தினார்.