திருச்சி அகதிகள் முகாமில் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் திடீர் உண்ணாவிரதம்

 
trichy akathikal mugam

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் தங்களை சக அகதிகள் போல நடத்த வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் 18-ஆம் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி காட்டி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தங்களையும் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனைதொடர்ந்து சென்னை வேலூர் மத்திய சிறையில் இருந்து முருகன் மற்றும் சாந்தனும், புழல் மத்திய சிறையில் இருந்து ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் 4 பேரும் இலங்கை தமிழர்கள் என்பதால் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான முகாமில் அவர்கள்  4 பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது சக வெளிநாட்டு அகதிகளை நடத்துவது போல் தங்களையும் நடத்த வேண்டும் என கூறி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.