வாங்கிய கடனை திரும்ப கேட்டதால் டெய்லரை வெட்டிக்கொன்ற இளைஞர்கள்

 
murder

திருவண்ணாமலை அடுத்த நல்லவன் பாளையம் கிராமம்  சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவர் பைனான்ஸ் மற்றும் டெய்லர் தொழில் செய்து வந்தார்.

murder

கடந்த 7-ம் தேதி இரவு ஆறுமுகம் தாமரை நகர் பிரதான  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆறுமுகம் மனைவி பிரபாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்திரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பளார் எஸ்.குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை அடுத்த வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (வயது 40) என்பவரிடம் விசாரித்தனர். இவருக்கும் ஆறுமுகத்திற்கும் கடந்த 7 வருடங்களாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. பரந்தாமன்  ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ஆறுமுகத்திடம் கடன் வாங்கியுள்ளார். கடனை திரும்ப கேட்டு வீட்டுக்கே சென்று ஆறுமுகம் மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரந்தாமன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 7-ம் தேதி ஆறுமுகத்தை கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் மற்றும் அவரது கூட்டாளிகளான  சாலையனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி (22), கரையான் செட்டி தெருவை சேர்ந்த  தமிழரசன் (20), திருவண்ணாமலை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த  ஸ்ரீகாந்த் என்கிற பூனை (20) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கொலை செய்வதற்காக அவர்கள் பயன்படுத்திய 2 வீச்சறிவாள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 4 பேரையும் திருவண்ணாமலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி 4 பேரையும்  வேலூர்  சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 3 பேரை காவல் துறையினர் தொடர்ந்து வலைவீசித்தேடி வருகின்றனர்.