அதிகாலையில் நடந்த கோர விபத்து : ஆம்னி பஸ் - கார் மோதலில் 4 பேர் பலி..!!

 
Q

ராமநாதபுரம் மாவட்டம், பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பிரபாகரன்,30, முதுகுளத்தூர் அம்மாசி மகன் கார்த்திக், 38, கண்ணாயிரம் மகன் காளீஸ்வரன், 25, ஓரி வயல் முருகேசன் மகன் கண்ணதாசன்,22, கார்த்தி மனைவி சூர்யா, 35, தேவிபட்டினம் சபரிகன் மகன் ஜான் கென்னடி, 35, ரவி மனைவி சரண்யா, 23, ஆகிய ஏழு பேர் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று (செப் 24) அதிகாலை 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே கார் வந்தபோது முன் சென்ற ஏ.வி.கே., ஆம்னி பஸ்சின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த கார்த்தி, பிரபாகரன், காளீஸ்வரன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். கண்ணதாசன், சூர்யா, ஜான் கென்னடி, சரண்யா ஆகிய 4 பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படனர். இதில் சூர்யா சிகிச்சை பலன் அளிக்காமல் உயரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து, தூத்துக்குடி மாவட்டம், நாசரேட் பகுதியை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் ராஜசீலன் ,45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்துள்ளான ஆம்னி பஸ்சில் தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்ற 34 பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் சென்னைக்கு சென்றுவிட்டனர்.