திமுகவினர் தாக்குதல்! வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

 
Hospital

திமுகவினர் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் 4 அதிகாரிகள் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  செந்தில் பாலாஜி வீடு,  அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ,கரூர் , பெங்களூரு , ஹைதராபாத் உள்ளிட்ட  இடங்களில் சோதனை நடைபெற்ற வரும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். 8 வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.  இந்த நிலையில், திமுகவினர் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 அதிகாரிகள் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 அதிகாரிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.