அரசு தொடக்கப் பள்ளிகளில் 3.94 லட்சம் மாணவர்கள் சேர்க்கை - அன்பில் மகேஷ்..!!
அரசு தொடக்கப் பள்ளிகளில் நேற்று வரை 3.94 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் மனநிலையும் பெற்றோர்களிடையே குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காலை உணவு திட்டம், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை , இலவச பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி சீருடை, நோட்டு புத்தகங்கள், காலணி, புத்தப்பை என மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி வரவழைக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன்பலனாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. அந்தவகையில் நடப்பாண்டு அரசு தொடக்கப்பள்ளிகளில் 3 லட்சத்து 94 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாணவர் சேர்க்கை 3 இலட்சத்து 94 ஆயிரம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க” என்று குறிப்பிட்டுள்ளார்.


