37,576 அரசு பள்ளிகளில் பிப்.10ம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்த உத்தரவு

 
dpi building

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்.10ம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு, அம்மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் புற கல்விச் செயல்பாடுகளில் அம்மாணவர்கள் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகின்றன. கல்வியாண்டு முழுவதும் பள்ளியில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை, ஆண்டு இறுதியில் மாணவர்கள் அவர்கள் தம் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமைவது பள்ளி ஆண்டு விழாவாகும். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

tn

*அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதற்கென சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

tn

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற வேண்டும். மாணவர்களின் தனித்திறன்களை அவர் தம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக வெளிப்படுத்த ஏதுவாக அரங்கம் அமைத்து, சிறந்த ஒளி, ஒலி அமைப்பினை ஏற்படுத்தி ஆண்டு விழாவினை கொண்டாடிட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எனவே, மேற்குறிப்பிட்டுள்ளவாறு உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 10.02.2024-க்குள் ஆண்டு விழாவினை நடத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) - ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.