அடுத்த 6 மாதங்களில் 3.7 லட்சம் பேர் பலியாகும் அபாயம்! – பசிபிக் பெருங்கடலில் உருவான பேரழிவு ஆபத்து!

 
1

பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் உலக அளவில் அடுத்த ஆறு மாதங்களில் கடுமையான அனல்காற்றால் கூடுதலாக 373,000 பேர் உயிரிழக்க நேரிடும் என ‘கிளைமேட் இம்பேக்ட் லேப்’ அமைப்பின் புதிய கண்காணிப்பு அறிக்கை கணித்துள்ளது.

மரணங்களில் பெரும்பாலானவை உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகளில் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மரணங்கள் நேரக்கூடும் என ஆய்வு தெரிவித்தது. குறிப்பாக, மார்ச் மாதத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவாகக்கூடும் எனக் கூறப்பட்டது. நைஜீரியாவில் 56,000 பேரும் இந்தோனீசியாவில் 29,000 பேரும் பிரேசிலில் 19,000 பேரும் வெப்பத்தால் பலியாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய, கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையை எல் நினோ அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் காற்று, காற்றழுத்தம், மழைப்பொழிவு முதலியவற்றில் அது மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

பெருங்கடல்களிலிருந்து பேரளவு வெப்பம் வெளியாக எல் நினோ காரணமாகிறது; இது பூமியின் காற்றுமண்டலத்தை வெப்பமயமாக்குகிறது.

மும்பையில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாண்டின் எல் நினோ 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவான ஆக வலுவான நிகழ்வு என உலக வானிலை ஆய்வகம் கூறியுள்ளது.