பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துக: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம்!
தமிழக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர்,
“நம்முடைய குடும்பத்தில், நம்முடைய வீட்டில் இருக்கிற பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி என பெண்களைப் பற்றிய ஒரு தீர்மானம் இது. அவர்களுக்காகவும், அவர்களைப் பற்றியும் என் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் பேசுகிறேன். இதற்கு முன்பு கிடைத்த வெற்றிக்கும், இன்று இந்த இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்.
பெண்கள் உயர்ந்தால் தான் சமூகத்திற்கு பெருமை கிடைக்கும். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழ்நாட்டு பெண்கள். ஆண்களை விட பெண்களை அதிக வாக்காளர்களாக உள்ளனர். பெண்களுக்கான அரசியல் இடம் என்பது சலுகை அல்ல அது உரிமை. பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தவெக அரசு உள்ளது. பேரவையில் நான்கு பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
பெண்களுக்கான பாதுகாப்பிலும் அவர்களுக்கான முக்கியத்துவத்திலும் தவெக அரசு கவனமாக தான் உள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்ததால் ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளனர். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான ஜனநாயக உரிமை” என்றார்.

