30வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் - கேரளா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

 
tn

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 3ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம் . இதில் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள் ,பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து  ஆலோசிக்கப்படும்.  அதன்படி தென் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் வருகிற செப்டம்பர் 3ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.  இதில் தமிழகம் ,புதுச்சேரி ,கேரளா, ஆந்திரா ,தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.  

stalin

இந்நிலையில் கேரளாவில் நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 2ம் தேதி காலை 11:30 மணி அளவில் சென்னையிலிருந்து தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார்.  அன்றைய தினம் கேரள முதல் பினராயி   விஜயனை சந்தித்து பேசும் அவர் முல்லைப் பெரியாறு ,சிறுவாணி, நெய்யாறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார் என்று தெரிகிறது. 

stalin

நாளை திருப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் பங்கேற்று விட்டு சென்னை திரும்புகிறார். இதையடுத்து இரண்டாம் தேதி கேரளா செல்லும் அவர் மூன்றாம் தேதி தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.