அண்ணாமலை உருவ படத்தை எரித்த அதிமுகவினர் 30 பேர் கைது

 
அதிமுக

அரியலூரில் அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிமுகவினரைத் தடுத்து நிறுத்திய போலீஸார்.

அண்மையில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை பாஜக இளைஞரணியைச் சேர்ந்த சிலர் எரித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிளை அதிமுக இணைத்து கொள்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இருப்பினும் பாஜகவினரின் இந்த செயல் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு நடைபெற்றது.  அதிமுகவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை தீ வைத்து எரிக்க முயற்சி செய்து அண்ணாமலை ஒழிக என கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். 

உடனடியாக அங்கு மீன்சுருட்டி காவல்துறையினர், அவர்களிடமிருந்து அண்ணாமலை உருவப்படத்தை கைப்பற்றி சுமார் 30-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.