பயங்கர விபத்து: மதுரையில் இருசக்கர வாகனங்கள் மோதி 3 இளைஞர்கள் உயிரிழப்பு..!

 
Death

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் சல்மான் கான் (21), விஷ்வா(21) விக்னேஷ் (22). இவர்கள் மூவரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவைப் பார்க்க நத்தத்திலிருந்து ஒரே பைக்கில் நேற்று இரவு மதுரைக்கு வந்துள்ளனர். பைக்கை சல்மான் கான் ஓட்டியுள்ளார். நள்ளிரவு 12:30 மணிக்கு நத்தம் மேம்பாலத்தில் அவர்கள் பயணித்துள்ளனர்.

அப்போது, எதிர்திசையில் மற்றொரு பைக்கில் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த மாதேஷ் (27) என்பவர் ஒரு வழி பாதையில் சென்றுள்ளார். அவர் ஒரு வழி பாதையில் வருவதை சல்மான் கான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால், அவரது பைக், மாதேஷ் பைக் மீது பலமாக மோதி உள்ளது. இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

காயம் அடைந்த அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், சல்மான் கான், விஷ்வா, மாதேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்திரை திருவிழாவை பார்க்க வந்த இளைஞர்கள் 3 பேர் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.