வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை? ராஜ்யசபாவில் இன்று தாக்கல் ஆகிறது புதிய மசோதா!

 
1

பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல், நாட்டின் தேசிய பாடலாக 1950 ஜனவரி 24 ல் அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இப்பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை குறிக்கும் வகையில் கடந்த ஜனவரி முதல் அரசு நிகழ்ச்சிகளில் இப்பாடலை முழுவதும் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. 

அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய பாடலான வந்தே மாதரம், தேசிய கீதமான ஜன கண மன பாட வேண்டும் என அறிவுறுத்தியது.வந்தே மாதரம் பாடலை சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட தேசிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கும் வகையில்புதிய சட்ட நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ள நிலையில, முதல்நாளிலேயே தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புமசோதா ராஜ்யசபாவில் இன்று (ஜூலை20) தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். அதன்படி, தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற முக்கிய சின்னங்களுக்கு இணையான அந்தஸ்தை வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்குவதே இதன் நோக்கம்.பார்லி.,யின் இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு விளைவித்தாலோ அல்லது அவமரியாதை செய்தாலோ, அல்லது அதை பாட மறுத்தாலோ அல்லது முழுமையாக பாட மறுத்து சில பகுதிகளை நீக்கி, சில வரிகளை மட்டும் பாடினாலோ, அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என, தெரிகிறது.