காஞ்சி சங்கர மட சம்பிரதாய பள்ளியில் வார்டன் தொல்லை- மாணவிகள் தப்பியோட்டம்

 
School-

காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் திருப்பதியில் செயல்பட்டு வந்த சம்பிரதாய பாடசாலையில் தங்கி படித்து வந்த 2 மைனர் மற்றும் இரண்டு மேஜர் மாணவிகள் திடீரென நள்ளிரவில் சுவர் எகிறி குதித்து ஓட்டப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Home

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், சந்திரகிரி அடுத்த தொண்டவாடாவில் காஞ்சி மடத்தின் சார்பில் சம்பிரதாய பாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பிரமண சமூகத்தை சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு இந்து கலாச்சார, பாரம்பரியத்துடன் கூடிய உண்டு உறைவிட பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி பல கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு  சம்பிரதாய கல்வியை இலவசமாக காஞ்சி மடத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.  

இந்நிலையில் இங்கு படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து அங்கு உள்ள  பெண் வார்டன்  மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைப்பதும், யாரிடமும் பேச விடாமல் கொடுமைப்படுத்துவதும் பெற்றோரிடம் கூட பேச விடாமல்  தடுத்து பல்வேறு விதத்தில் மாணவிகளை டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல பெற்றோர்கள் நிர்வாகத்தினரிடம் பேசி தங்கள் பிள்ளைகளை திரும்ப அழைத்துச் சென்றுள்ளனர். அவ்வாறு அழைத்துச்செல்லும் பெற்றோரிடம் உங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் இவ்வளவு செலவு செய்திருக்கிறோம் எனக்கூறி 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணம்  பெற்று வருகின்றனர். 

இலவசமாக சம்பிரதாய பயிற்சியுடன் உண்டு உறைவிட பள்ளி என கூறக்கூடிய இந்த  பள்ளியில் மாணவிகளை திரும்ப அழைத்து செல்ல வேண்டும் என்றால் பெற்றோர்கள் பணம் செலுத்தினால் மட்டுமே திரும்ப அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டுகளும் உள்ளது. இருப்பினும்  பல பெற்றோர்கள் பணத்தை செலுத்தி தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் சந்திரகிரி அருகே உள்ள சீனிவாசா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டே காஞ்சி மடத்தின் சம்பிரதாய பள்ளியில் தங்கி வந்த கடப்பா மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்தி, விஜயவாடாவை சேர்ந்த வித்யலட்சுமி வர்ஷுனி, விசாகப்பட்டினம் சரவந்தி மற்றும் விஜயநகரை சேர்ந்த ஸ்ரீவள்ளி ஆகிய   4  மாணவிகள் பள்ளியின் 8 அடி உயர சுவரை ஏறி குதித்து சென்று விட்டனர். 

காஞ்சி மடத்தின் பாரம்பரிய கல்லூரி நிர்வாகத்தின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவிகளின் சொந்த ஊர் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருவதாக மேற்கு காவல் நிலைய  டிஎஸ்பி நரசப்பா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் மாணவிகள் இங்குள்ள நிர்வாகத்தின் டார்ச்சரால் சென்றார்களா, காதல் விவகாரமா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்பது குறித்து அவர்களை கண்டுபிடித்த பிறகே தெரிய வரும் என அவர் தெரிவித்தார்.