கிணறு வெட்டும்பணியின் போது ரோப் அறுந்துவிழுந்து 3 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணறு வெட்டும் பணியின் போது ரோப் கயிறு அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று நள்ளிரவில் கிணற்றை தூர் வாருவதற்கு, கிரீன் மூலமாக இரும்பு கயிறு கட்டிய பக்கெட்டில் இறங்கிய போது, ரோப் அறுந்து ஹரிகிருஷ்ணன், தணிகாசலம், முருகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களது உடலை மீட்ட திருவெண்ணெய்நல்லூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்த நிலத்தின் உரிமையாளர் கண்ணன் வயது 60 மற்றும் கிரேனின் உரிமையாளரும் ஓட்டுநருமான எறையூர் பகுதியை சேர்ந்த சின்னப்பன் வயது 41 ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை இரண்டு வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தி விசாரணையில், நேற்று நள்ளிரவு கிணற்றை தூர் வாரும் பணிக்காக கிரேன் மூலம் மூவரையும் கிணற்றில் இறக்கிய போது இரும்பு கம்பி அறுந்து விழுந்ததில் அவர்கள் மூவரும் இறந்துவிட்டதை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.