இடைத்தேர்தலில் போட்டியிட 3 பேருக்கு தடை- தேர்தல் அதிகாரி

 
இடைத்தேர்தலில் போட்டியிட 3 பேருக்கு தடை- தேர்தல் அதிகாரி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து  மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜகோபால் சுன்கரா, “தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கு குற்ற பின்னணி இருந்தால் அதனை மூன்று முறை தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும். பத்தாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் இருந்து  100 மீட்டருக்குள்  3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் சேர்ந்து மொத்தம் ஐந்து பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் முடிவு வந்த 30 நாட்களுக்குள் மூன்று வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அந்த மூன்று பேர் இந்த தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வரும் வரை  குறை தீர்ப்பு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு  கால அவகாசம் இல்லாததால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என மனு பெறப்பட்டுள்ளது. அதனை தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்போம். இது தொடர்பாக பரிந்துரை செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார்.