கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியான சம்பவம் - மேலும் 3 பேர் கைது!

 
arrest

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். . 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதை எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆபத்தான முறையில் அவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதை கண்ட  அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். நேற்று வரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி,  செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  அத்துடன் இது தொடர்பாக சாராய வியாபாரிகள் மீது குண்டர்  தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.  

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.