டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி

 
accident

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 3 மாத குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரியில் இருந்து ஆந்திரா நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஆந்திராவில் பணி செய்வதற்காக ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் எர்ரஹள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆம்னி பேருந்து மற்றும் டிராக்டரில் பயணம் செய்தவர்கள் ஏராளமானோர் காயம் அடைந்தனர். 

மேலும் இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் சவலூரை சேர்ந்த முத்து (20), மல்லி (60), முனுசாமி (50), வசந்தி (45) மற்றும் 3 மாத குழந்தை வர்ஷினி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தருமபுரியைச் சேர்ந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.