ஆன்மீகம் அறிவோம் : திருக்கார்த்திகை தீபம் அன்று செய்யக் கூடாத 3 தவறுகள்..!
திருக்கார்த்திகை தீபம் என்பது இறைவனை ஒளி வடிவமாக வழிபடும் திருநாளாகும். இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகள் அதிகரிக்கும். இது இறை அருளையும், செல்வ நலன்களையும் பெறுவதற்கான நாளாகும். திருக்கார்த்திகை தீபத் திருநாள் சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி, மகாலட்சுமியை வழிபட்டு, அவரின் அருளை முழுவதுமாக பெறுவதற்குரிய சக்தி வாய்ந்த நாளாகும். இதனால் இந்த நாளில் மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடக் கூடாது. தெரியாமல் செய்யும் இந்த தவறுகளால் நமக்கு கெடுதல்கள் ஏற்படுவதுடன், இறைவனின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று செய்யக் கூடாத 3 தவறுகள் :
1.திருக்கார்த்திகை தீபத் திருநாளின் புனிதத்தைக் கருதி, எந்தக் காரணம் கொண்டும் வீட்டில் விளக்கேற்றாமல் இருளாக வைத்திருக்கக் கூடாது. நீங்கள் வெளியூர் சென்றாலோ அல்லது ஆன்மீகப் பயணம் மேற்கொண்டாலோ, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அல்லது உறவினர்கள் யாரையாவது வீட்டில் இருக்கச் செய்து விளக்கேற்றி வைக்கச் செய்யலாம். அவர்களால் வீட்டில் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் வீட்டு நிலை வாசலில் மட்டுமாவது இரண்டு அகல் விளக்குகள் எரியும்படி செய்வது கட்டாயமாகும்; பூஜை அறையில் வழிபட முடியவில்லை என்றாலும், நிலைவாசலில் விளக்கு ஏற்றுவதைத் தவிர்க்கக் கூடாது.
2. திருக்கார்த்திகை தீபம் அன்று விரதம் இருப்பது சிறப்பு. அப்படி விரதம் இருக்க முடியவில்லை என்றால் சைவமாக சாப்பிட்டு, இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். மறந்தும் கூட இந்த நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. அது மிகப் பெரிய பாவமாகும்.
3. திருக்கார்த்திகை தீபம் அன்று யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. மளிகைக் கடையிலோ அல்லது வேறு ஏதாவது பொருட்கள் வாங்கினால் கூட பணம் கொடுத்து தான் அந்த பொருளை வாங்க வேண்டுமே தவிர, கடனாக ஒரு போதும் வாங்கக் கூடாது. திருக்கார்த்திகை திருநாள் என்பது மகாலட்சுமியை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவளின் அருட்கடாட்சத்தை பெறுவதற்கான நாளாகும். இதனால் மகாலட்சுமி மனம் மகிழும் படியான விஷயங்களை மட்டுமே இந்த நாளில் செய்ய வேண்டும்.

