#BREAKING வேரோடு சாய்ந்த புளியமரம்- அறுந்து விழுந்த மின்கம்பி... 3 பேர் பலி

 
ச்

சிதம்பரம் அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் வேரோடு பெயர்ந்து மின்கம்பி, வீட்டின் மீது விழுந்து விபத்து. கணவன், மனைவி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு  உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதலே அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து வந்தது. தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்த நிலையில் இன்று மாலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஒரு புளியமரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. இந்த புளியமரம் விழுந்தபோது சாலை ஓரத்தில் சென்ற மின் கம்பியில் சிக்கியதால் மின்சார கம்பிகளும் அறுந்து வீட்டின் மீதும், அதன் அருகில் இருந்த ஒரு சிறிய தேவாலயத்தின் மீதும் விழுந்தது. இதில் மின் கம்பியில் சிக்கி வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சாத்தமங்கலம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த மரியசூசை(70), இவரது மனைவி பிலோன்மேரி(60), உறவினரான வனதாஸ்மேரி (70) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்த கனகராஜ்(45) என்பவர் காயமடைந்து சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒரத்தூர் போலீசார் மற்றும் சேத்தியாத்தோப்பு தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி இருந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தீயணைப்புத்துறை வீரர்கள் நவீன எந்திரம் மூலம் உடனடியாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து மின்சார வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்சார கம்பிகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மரம் பெயர்ந்து விழுந்து அதன் காரணமாக மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 3 பேர் சிக்கி உயிரிழந்த சம்பவம் இந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.