பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

 
mkstalin

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.

தருமபுரியில் பட்டாசு ஆலையில் தீ விபத்து..  2 பெண்கள் பலி..

சிவகாசி அருகே திருத்தங்கல் ஏ. ஜே நகரை சேர்ந்த கடற்கரை என்பவருக்கு சொந்தமாக ஊராம் பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 25க்கும் மேற்பட்ட அறைகளில், நூற்றுக்கணக்கான ஆண்- பெண் தொழிலாளர்கள் பல்வேறு பட்டாசு வகைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சட்டி மற்றும் தரைசக்கரம் போன்ற பட்டாசு ரகங்களுக்கு மருந்து செலுத்தும் அறையில் மூலப் பொருள்களில் வேதியியல் மாற்றம் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமாகி, அருகில் இருந்த மற்றொரு அறையும் சேதமானது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி குமரேசன்( வயது 35) சுந்தர்ராஜ்( வயது 27) அய்யம்மாள்( வயது 70 )இருளாகி( வயது 45) ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய 2 ஆண் தொழிலாளர்களும் உயிரிழந்தனர். 

காஞ்சிபுரம் : பட்டாசு ஆலையில் வெடிவிபத்து -  9 பேர் பலி..

படுகாயம் அடைந்த அய்யம்மாள் முதலுதவி பெற்ற பின்பாக மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த இருளாயி சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த தொழிற்சாலையில் தீயணைப்பு படையினர், வருவாய் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிற்சாலை மேற்பார்வையாளர் பள்ளபட்டியைச் சேர்ந்த காளியப்பன்( வயது 40) என்பவரை கைது செய்து, தலைமறைவாய் உள்ள உரிமையாளர் கடற்கரையை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருளாயிக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.