டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் பலி! ரேசன் பொருட்கள் வாங்க சென்றபோது விபரீதம்

 
a a

ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே டிராக்டரில் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு கூவர் கூட்டத்தை சேர்ந்த 11 பெண்கள், 2 ஆண்கள் ரேஷன் பொருட்கள் வாங்க டிராக்டரில் வந்திருந்தனர். ரேஷன் பொருட்கள் வாங்கி திரும்பும் போது டிராக்டர் சின்ன பொதிகுளம் கிராமம் அருகே கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் சம்பவ இடத்தில் பலியாகினர். பொன்னம்மாள்(60), ராக்கி (65), முனியம்மாள்(65) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயம்பட்ட 8 பெண்கள், 2 ஆண் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து  இளஞ்சம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை சரியில்லாததால் இந்த விபத்து நடைபெற்றதாக இறந்த மூன்று பேரின் உடலை வாங்க மறுத்து கூவர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் சுமார் 200 பேர் இறந்தவர்களின் உடலுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும், கூவர் கூட்டத்திற்கு உடனடியாக சாலை மற்றும் ரேஷன் கடை அமைக்க கோரியும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் முதுகுளத்தூர் பரமக்குடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மறியல் செய்பவர்களிடம் பரமக்குடி கோட்டாட்சியர் சரவண பெருமாள் மற்றும் முதுகுளத்தூர் டி.எஸ்.பி. சண்முகம் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.