தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்!
நிதி நிறுவனம் நடத்தி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் மயிலாப்பூர் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தேவநாதனின் 5 வங்கி கணக்குகள் உள்பட நிதி நிறுவனத்தின் 18 வங்கி கணக்குகள், குணசீலன் மற்றும் மகிமைநாதனின் தலா 2 வங்கிக் கணக்குகள் என மொத்தம் 27 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். ஏற்கனவே நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவன, அடையாறு, வண்ணாரப்பேட்டை ,சைதாப்பேட்டை, பெரம்பூர் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்கள் என 8 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 5-வது நாளாக தேவநாதனிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. தேவநாதனை மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துவந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அப்போது தேவநாதனின் மயிலாப்பூர் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் மற்றும் வெள்ளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.