மதுபோதையில் ஓட்டுநர்...தறிக்கெட்டு ஓடிய கார்... நடைபாதையில் தூங்கிய 3 பேர் பரிதாபமாக பலி

திருச்சியில், மதுபோதையில் ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடிய கார் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரம் அருகே உள்ள நடைபாதையில் ஆதரவற்றவர்கள் சிலர் தினமும் படுத்து தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று இரவும் சிலர் அந்த நடைபாதையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த வழியாக நள்ளிரவில் அதிவேகமாக கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய அந்த கார் நடைபாதையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.
தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக காரை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.