"சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தோம்"- மீனவர்கள் கண்ணீர்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் 6 நாட்கள் கடலில் தத்தளித்த நிலையில், இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், மனோகர் மற்றும் நாகவேல் ஆகியோர் கடந்த மூன்றாம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பல மணிநேரம் ஆகியும் அவர்கள் கரை திரும்பாததால், கடலோர காவல்துறை மற்றும் மீன்வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து அவர்களை கடலில் தேடிவந்தனர். இந்நிலையில், தாழங்குடா என்ற கடற்பகுதியில் சிக்கியிருந்த அவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்துவந்தனர். படகில் ஏற்பட்ட பழுது காரணமாக, அவர்கள் 6 நாட்கள் கடலில் தத்தளித்ததாகவும் கூறப்படுகிறது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 நாட்களாக உணவின்றி தவித்ததாக கூறும் அந்த மீனவர்கள், கடல் நீர் மற்றும் சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தோம் என மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க கூறினர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

