விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள்.. தலா ரூ.10 நிதியுதவி அறிவித்த மாநகராட்சி ஆணையர்..

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்றிரவு மாநகராட்சி கழிவுநீர் தொட்டி அருகே, மின் மோட்டார் பழுது பார்க்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் சிவக்குமார்(44), சரவணகுமார்(30), லட்சுமணன் (33) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவக்குமார் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததை அடுத்து, அவரை மீட்க மற்ற இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது விஷ வாயு தாக்கியதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் லோகநாதன்(50) மற்றும் ரமேஷ் (29) வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த துயர சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்திருக்கிறார். முதற்கட்டமாக தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.