பேருந்து மீது மோதிய கார்! துடிதுடித்து பிரிந்த 3 கல்லூரி மாணவர்கள் உயிர்
திட்டக்குடி அருகே தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சென்ற கார் தடுப்பு கட்டை மீது மோதி எதிர் திசையில் வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவிடத்திலேயே பலியாகினர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி அருகே உள்ள ஒரு தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் தொழுதூர் மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துள்ளனர். அந்த கார் அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டை மீது ஏறி எதிர்திசையில் வந்த வேப்பூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த தரணி செல்வம், விநாயகமூர்த்தி, நிஷாந்த் ஆகிய 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இறந்து போன மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


