திருப்பதி அருகே கோர விபத்து - சென்னையை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலி

 
accident

திருப்பதி அருகே சாமி தரிசனம் செய்வதற்காக காரில் சென்றவர்கள் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னையை சேர்ந்த மூன்று பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செயதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மூன்று பேரும் திருப்பதி நோக்கி நகரி அருகே தர்மபுரத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், திருப்பதியில் இருந்து நகரி நோக்கி டேங்கர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த லாரி தர்மபுரம் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது அதிவேகமாக மோதியது. டேங்கர் லாரி மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

காரின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை வெளியே கொண்டு வந்தனர். இதனிடையே விபத்து குறித்து நகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களும், போலீசாரும் சேர்ந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.