காணொளியா? காணொலியா? – அனல்பறக்கும் விவாதம்

 

காணொளியா? காணொலியா? – அனல்பறக்கும் விவாதம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் கடந்த 22ம் தேதி அன்று தனது முகநூல் பக்கத்தில், காணொளியா? காணொலியா? எது சரி? கவிஞர் மகுடேசுவரன் விளக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு மகுடேசுவரன், கவிஞர் தாமரை உள்ளிட்ட பலரும் விளக்கம் கொடுத்ததால் இது பெரும் விவாதமாக சென்று கொண்டிருக்கிறது.

காணொளியா? காணொலியா? – அனல்பறக்கும் விவாதம்

இதுகுறித்து இன்று 29.6.2021ல் காணொளியா – காணொலியா என்று கேட்டிருந்தேன். கவிஞர் மகுடேசுவரன் இலக்கண விளக்கங்களோடு ‘காணொளி’ என்பதே சரி என்று விளக்கியிருந்தார். கவிஞர் தாமரை ‘காணொலி’ என்பதே சிறப்பு என்று சுவைபட விளக்கியிருந்தார். என்ன நான் செய்வேன்! இரண்டையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன்! என்று பதிவிட்டிருக்கிறார் ஜேம்ஸ் வசந்த்.

கவிஞர் தாமரையின் விளக்கத்தில் நுட்பமானதொரு அணுகுமுறை. ‘ஒளியும், ஒலியும்’ எவ்வளவு எளிமையான பளிச்சென்ற தலைப்பு! காணொலி என்பதே எனக்கும் சரியென்று தோன்றுகிறது. முன்பு நான் தவறாகக் குறிப்பிட்டிருக்கக்கூடும் என்றும் புரிகிறது. தொலைக்காட்சி என்பதிலும் ஒலி பற்றிய குறிப்பில்லையே என்று இன்னோர் ஐயமும் எழுந்துவிட்டது. ஒரு காட்சி என்பது காண்பது, கேட்பது இரண்டும் சேர்ந்ததுதான் என்று எனக்கே விளக்கமளித்துக்கொள்ள முற்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எழுத்தாளர் சுரேஷ்சுபா.

காண் என்பதில் ஒளி வந்துட்டு கேட்பதை குறிக்க ஒலி வரணும் அதனால காணொலி சரி என்கிறார் பிச்சுமணி என்பவர். காணொலி என்பதே ஈழத்தில் பயன்படுத்தப்பட்டது காணொலிப் பேழை என்பது வீடியோ. கெசட்டை குறிக்க பயன்படுத்தப்பட்டது ஒலிப்பேழை என ஓடியோ கெசட்டை குறிக்க பயன்படுத்தப்பட்டது என்கிறார் திவாகரன் நவரத்தினம்.

காணொளியா? காணொலியா? – அனல்பறக்கும் விவாதம்

கவிஞர் தாமரை அளித்துள்ள விளக்கம்:

காணொலி என்பதையே நான் பயன்படுத்தி வருகிறேன். இது தொடர்பாக எனக்கும் கவிஞர் மகுடேஸ்வரனுக்கும் கருத்து மாறுபாடு உண்டு.
என் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதை இங்கே பதிகிறேன். நீங்களே முடிவெடுக்கலாம்.

25.8.2020. காணொலி, காணொளி – இரண்டில் எது சரி என்றொரு விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாகப் பின்னணி விவரங்களைக் கூறினால் புரிந்து கொள்வீர்கள்.
காணொலி என்றே நான் எழுதி வருகிறேன்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒலி மட்டுமே இருந்து வந்தது, அதாவது வானொலி, கிராமபோன் ரெக்கார்ட் போல….
படம் பார்க்க வேண்டுமானால் திரைப்படமாக, திரையரங்குக்குப் போய்தான் காண வேண்டும். இந்நிலையில், கோவை சிதம்பரம் பூங்கா நேரு விளையாட்டரங்கில் ( Stadium ) நாடகக் காட்சி, இயைந்து போகும் இசை – என ஒரு நிகழ்ச்சி முதன்முதலாக அறிமுகப் படுத்தப் பட்டது. பாரதியார் வாழ்க்கை அல்லது கண்ணகி காதை – சரியாக நினைவில்லை ! நான் பாவாடை சட்டை அணிந்து சிறுமியாக இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தது புகைமூட்டமாக நினைவிலிருக்கிறது …
அதற்கான விளம்பரமாக ‘ அனைவரும் திரண்டு வாரீர்… ஒலி-ஒளி நிகழ்ச்சி காண’ என்று அறிவிப்பார்கள்.
அவ்வகையில் ‘ஒலி-ஒளி’ எனும் புதிய வகை நிகழ்ச்சி அறிமுகப் படுத்தப் பட்டது.
( இதில் அரை வட்டப் பரப்பில், விட்டு விட்டு நான்கைந்து மேடைகள் இருக்கும். ஒரு காட்சி ஒரு மேடையில் முடிந்ததும், அந்த மேடை இருட்டாக்கப்பட்டு, அடுத்த மேடையில் ஒளி பாய்ச்சப் பட்டு அடுத்த காட்சி அதில் தொடரும்… இப்படியாக ஒளி மாறி மாறித் தோன்றும், பாத்திரங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களுக்கு வாயசைத்து நடிப்பர். மக்களுக்கு ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் கணீரென்று எல்லோருக்கும் கேட்கும் ). இது அந்தக் காலத்தில் மக்களுக்குப் பெரும் வியப்பை அளித்தது. வரவேற்புப் பெற்றது. ஒலி-ஒளி எனும் பெயர் வந்தது இப்படித்தான் !.

காணொளியா? காணொலியா? – அனல்பறக்கும் விவாதம்

பிறகு, பொதிகை ( தூரதர்ஷன் ! ) தொலைக்காட்சியில் பாடலும் காட்சியுமாக நிகழ்ச்சி ஆரம்பித்த போது, அதற்கு ‘ஒலியும் ஒளியும்’ என்றே பெயர் சூட்டினார்கள். மிகப் பிரபலமான நிகழ்ச்சி அது !. தனியாகக் கேட்ட திரைப்படப் பாடல்கள், காட்சியோடு சேர்ந்து கிடைப்பதைக் குறித்தது !.
அதாவது நாம் ஒலியாகக் (பாடல்) கேட்டு இரசித்தவை, ஒளியாகவும் (காட்சியாகவும்) கிடைக்கப் பெற்றன .
பாடலைக் காணுதல் என்பதுதான் ‘காணொலி’…
இதுவே பின்னாளில், audiovisual AV என்பதைக் குறிக்கும் காணொலியாக வளர்ந்தது !.
காட்சி+ஒலி… அவ்வளவுதான் !.
‘ஒலியொளி’ ‘ஒளியொலி’ போன்ற சொற்கள் புழக்கத்தில் தொடராததற்கு மற்றுமொரு மாபெரும் காரணம் ‘லகர’ ‘ளகர’ உச்சரிப்பு பலருக்கும் தகராறாக இருந்ததுதான்.
‘காணொளி’ என்பது காணும் காட்சி அவ்வளவுதான், இதில் எந்த நுட்பமும் இல்லை, ஒலி என்பதை உள்ளடக்கவும் இல்லை.

காணொளியா? காணொலியா? – அனல்பறக்கும் விவாதம்

ஒலியை எப்படிக் காண முடியும் என்று கேள்வி எழுப்புவது அறிவியல் ரீதியாகச் சரி !. கலாபூர்வமாகத் தவறு !. இப்போதும் அறிவியல் கலைச் சொல்லாக்க அறிஞர்கள் இந்தச் சொற்களை ( காணொலி, காணொளி ) ஏற்பதில்லை. கவித்துவமாக இருப்பதாலும், காரணப் பெயராக இருப்பதாலும் நான் இப்போதும் காணொலி என்பதையே பயன்படுத்துகிறேன். ஏனென்றால் இது அந்தக் காலத்தில் இருந்து தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் சொல் !. நன்றாகவும் இருக்கிறதே, பயன்படுத்தலாமே !. ‘கேளா ஒலி’ என்று ஒன்று இருக்கிறது தெரியுமா உங்களுக்கு ? . ஒலி என்றாலே கேட்பதுதானே, அதெப்படி ‘கேளா ஒலி’ என்று ஒன்று இருக்க முடியும் எனக் கேள்வி எழும்பும்.

ஒலிகளில் மனிதக் காது கேட்கக் கூடிய அலைவரிசை, அலை அதிர்வெண் வீச்சு ( frequency range ) உள்ளது. அதற்குக் கீழ் அல்லது மேலாக (20 Hz – 20,000 Hz) இருக்கக் கூடியவற்றை மனிதக் காதால் கேட்க முடியாது. அதற்காக அங்கு ஒலியே இல்லை என்று கூறி விட முடியாது. மேலே உள்ள ஒலியை ultrasonic sound என்று அழைக்கிறோம். இந்த அல்ட்ராசானிக் ஒலியைப் பலவிதங்களிலும் தொழில்நுட்பமாகப் பயன்படுத்துகிறோம். தமிழில் இதைக் ‘கேளா ஒலி’ என்கிறோம். எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது பாருங்கள். நான் தமிழில், ஒரு திரைப்படப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறேன். . ( படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள். பாடல் : யார் அவள் யாரோ )!. கேளா ஒலியைக் கேட்கும் தன்மையுடைய ஓர் உயிரினம் வௌவால் .