27.53 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியிலில் சேர்ப்பு

 
voter id card

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி மொத்தமாக 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 

voters

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்திற்கான இறுதிவாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நிலவரப்படி 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் இருந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி, சுமார் 99 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்களாக மாறியதாக பேசினார். அதன் தொடர்ச்சியாக ஜனவரி 31 ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் ஆட்சேபனைகளுக்கு பிறகு தற்போதைய நிலவரப்படி மொத்தமாக 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 617 மூன்றாம் பாலினத்தவரும் இருப்பதாகவும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், பெயர் சேர்க்க பெறப்பட்ட 27,85,195 விண்ணப்பங்களில் 27,53,796 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். இவர்களில் 7.40 லட்சம் பேர் 18 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் என்றும் தெரிவித்தார். வெளி மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள 3400 பேர் தொகுதி மாற்றம் செய்வதற்கான படிவம் 8 அளித்ததாகவும், இதில் 3351 படிவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைத் தவிர்த்து, வாக்காளர் பதிவு அதிகாரியின் முடிவுக்கு எதிராக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடன் முதல் முறையீடு செய்யலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரியுடம் 2வது முறையீடு செய்யலாம் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 991 வாக்காளர்கள் இருப்பதாகவும், குறைந்தபட்சமாக ஒரு துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 896 பேர் இருப்பதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைத்தளமான https://elections.tn.gov.in பக்கத்தில் பார்க்கலாம் எனவும், 1.1.2026 அன்று 18வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் தங்களின் பெயரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம் எனவும் அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.