திருவண்ணாமலை தீபத் திருவிழா- 2,500 பேர் மலையேற அனுமதி

 
thiruvannamalai

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது 2,500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுபவர் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...


திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்த சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை செயலாளர், ஆணையாளர், கோவில் நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தீபத்திருவிழாவிற்காக என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக சிறப்புரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தீபத் திருவிழாவிற்காக இந்த ஆண்டு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் 14 சிறப்பு கூடுதல் ரயில் இயக்கப்படும் என்றும், 2692 சிறப்பு பேருந்துகள் 6431 நடைகள் இயக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மற்றும் அதனைச் சுற்றி 12 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வண்ணம் 59 இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் திருவண்ணாமலையில் உள்ள 9 இடங்களில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து தீபத் திருவிழாவிற்காக 12097 காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் 169 சிசி டிவி கேமராக்களும் கிரிவலப் பாதை முழுக்க 97 சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் உயர்நீதிமன்ற உத்தரவின் படி இந்த ஆண்டு 2500 ஆன்மீக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.