சென்னையில் 25 வயதான போதைபொருள் கடத்தல் கும்பல் தலைவி கைது!

 
ச்

சென்னையில் போதைப்பொருள் பழக்கம் அதிகமாகி வரும் நிலையில், போதைப்பொருள் கடத்தும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக பிரத்தியேகமாக போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவு பிரிவு என ஒரு பிரிவை சென்னை காவல் ஆணையர் அருண் உருவாக்கினார். சென்னை காவல்துறை வடக்கு மண்டலத்தில் செயல்படும் இந்த ஏஎன்ஐ போலீசார் போதைப் பொருள் உபயோகிப்பவர் களை கண்காணித்து அவர்களுக்கு சப்ளை செய்பவர்கள் யார் என பின்தொடர்ந்து,  நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். 

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 20), ஹோட்டலில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ் (23), அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்து வரும் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த (18 வயது) சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த (17 வயது) சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மெத்தம்பட்டமைன் எப்படி கிடைத்தது? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டபோது மணலி பகுதியைச் சேர்ந்த மவுபியா (25) என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில்  மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.  விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மவுபியா மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மவுபியாவின் தந்தை அக்பர் போதை பொருள் கடத்தல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். மூன்று ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

தந்தை சிறை சென்ற பிறகு, அவரது கூட்டாளிகளுடன் இணைந்து மவுபியா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. போதைப் பொருள் விற்பனையில் எத்தனை இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற பட்டியலை விசாரித்து வரும் போலீசார் தப்பிச்சென்ற  அசார்,டேனி உட்பட  ஒட்டுமொத்த போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கையும் பிடிப்பதற்கு தீவிரம் காட்டிவருகின்றனர்.

....