தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு..!
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே தொடர்ச்சியாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனை தீர்த்து வைக்க தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. உச்ச நீதிமன்றம் வரையறுத்த 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவதை கண்காணிப்பது இதன் பொறுப்பு. அத்துடன், இரு மாநிலங்களுக்கு இடையிலான மழைப் பொழிவு, அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து தண்ணீர் பங்கீடு தொடர்பாக இந்த அமைப்புகள் உத்தரவு பிறப்பிக்கின்றன.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே தண்ணீர் திறப்பில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த அளவை விட அதிகமாகவே தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த பல மாதங்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 107.59 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்தும் காவிரி ஆற்றில் 2034 கன அடியாக உள்ளது. அணையில் 75.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் சுமார் 1000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 39வது கூட்டம் நேற்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில் தண்ணீர் இருப்பு, தேவை உள்ளிட்டவை குறித்து இரு மாநிலங்களிடமும் கருத்து கேட்டறியப்பட்டது. முடிவில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


