கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் வருமான வரி வசூல் 25% அதிகரிப்பு

 
tax

கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் இதுவரையிலான வருமான வரி வசூல் 25 சதவீதம் அதிகரித்துள்ளாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், சென்னை வருமான வரி தலைமை ஆலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நன்றாக நகரமயமாக்கப்பட்ட பகுதியாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிதியாண்டு 1991-1992ல் நேரடி வரி வசூல் ரூ 1,108 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் (2021-22) மொத்த நேரடி வரி வசூல் முதன்முறையாக ஒரு லட்சம் கோடி இலக்கை எட்டியது, அதாவது ரூ 1,01,499 கோடி, நிகர வரி வசூல் 90,108 கோடி. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாட்டின் கருவூலத்திற்கு நிதி பங்களிப்பில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நான்காம் இடத்தில் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் வரி வசூல் இலக்கு ரூ 1,08,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இலக்கு ரூ 81,000 கோடிகள் விட 33% அதிகம். கடந்தாண்டின் வரி வசூலை நடப்பாண்டின் வரி வசூலை ஒப்பிடும்போது, அதன் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நான்காம் இடத்தில் உள்ளது. இன்றைய தேதியில் மொத்த வரி வசூல் ரூ 92,920 கோடி, கடந்த நிதியாண்டில் இதே தேதியில் மொத்த வரி வசூல் ரூ 73,035 ஆகும், மொத்த வரி வசூலில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் மொத்த வரி வசூலின் வளர்ச்சி 27.23 % விழுக்காடு ஆகும். இன்றைய தேதியில் நிகர வரி வசூல் ரூ 80,480 கோடி, கடந்த நிதியாண்டில் இதே தேதியில் நிகர வரி வசூல் ரூ 64,102 ஆகும், நிகர வரி வசூலில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் நிகர வரி வசூலின் வளர்ச்சி 25.5 % விழுக்காடு ஆகும். நிதியாண்டு 2021-22ல் நிகர வரி வசூல் ரூ 90,180 கோடி, இதில் T.D.S ன் வரி வசூல் ரூ 47,977 கோடி ( அஃதாவது 53 விழுக்காடு). நிதியாண்டு 2022-23ல் T.D.S ன் வரி வசூல் இன்றைய தேதியில்  ரூ 47,313  கோடி,  இதே தேதியில்  சென்ற நிதியாண்டை  விட  இவ்வருட T.D.S ன் வரி வசூலின் வளர்ச்சி 27 % விழுக்காடு ஆகும்.

மூலத்தில் பிடிக்கப்படும் வரி (Tax Deducted at Source -TDS) / மூலத்தில் வசூலிக்கப்படும் வரி (Tax Collected at Source -TCS) என்பது “நீங்கள் சம்பாதிக்கும்போதே செலுத்தவும்” என்கிற அடிப்படையில் அரசாங்க கருவூலத்திற்கு சீரான வருவாயை வழங்கும் பொருட்டு உருவானது. வரிகளை வசூலிக்க இது ஒரு திறமையான மற்றும் எளிமையான வழியாகும். வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு இது ஒரு சுய தணிக்கைக்கான பாதையை உருவாக்குகிறது.

தற்போது, அகில இந்திய அளவிலான மொத்த வரி வசூலில் 50% TDS பங்களிக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தில், 2021-22 நிதியாண்டில் மொத்த நிகர வரி வசூலில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள TDS ஆணையரகங்கள் 53% பங்களித்துள்ளன. 2022-23 நிதியாண்டில் (31.12.2022 வரை), TDS/TCS வசூல் ரூ.38,817 கோடி மற்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41% கவனிக்கக்கூடிய விகிதத்தில் வளர்ந்து வருகிறது.

2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில், கூட்டுறவு வங்கிகள், உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், மீடியா, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அரசாங்கக் அலுவலகங்கள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கி மொத்தம் 124 Survey நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாகப் TDS பிடித்தம் செய்யாத / பிடித்தம் செய்து அரசாங்க கருவூலத்தில் செலுத்தப்படாத தொகையாக ரூ.245.89 கோடி கண்டறியப்பட்டுள்ளது” எனக் கூறினார்.