காவல்துறையினர் 3வது நாளாக அதிரடி வேட்டை - கள்ளச்சாராய வியாபாரிகள் 2,461 பேர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராய வியாபாரிகள் 2,461 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆபத்தான முறையில் அவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இதுவரை 14 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் நேற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அவர் ,உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இது தொடர்பாக 2,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதில் 2,461 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பெண்களும் அடங்குவார்கள். 2 நாட்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. 2,583 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கரவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.