234 மாவட்ட செயலாளர்கள்- முதல்வர் விஜயின் புதிய வியூகம்

 
எனது தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன் - விஜய் வாக்குறுதி

தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது மாநிலம் முழுவதும் 132 மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் உள்ளனர். தற்போதைய தேர்தல் வெற்றியை வெறும் ஆரம்பப் புள்ளியாக மட்டுமே பார்க்கும் விஜய், அடிமட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்த இந்த எண்ணிக்கையை அப்படியே மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தின் மொத்தச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையான 234-க்கு இணையாக, 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. "ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்" என்ற இந்த புதிய உத்தி, தமிழக அரசியலில் ஒரு புதிய பாணியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக நிர்வாகிகள் கூட்டம்

ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படும்போது, அந்தந்தப் பகுதியின் உள்ளூர் பிரமுகர்களுடனும் பொதுமக்களுடனும் தினசரி தொடர்பில் இருக்க முடியும். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை உடனுக்குடன் கட்சித் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கவும் இந்த முறை பெரிதும் உதவும். தற்போதைய தவெக சட்டமன்ற உறுப்பினர்களில் யார் யாருக்கு மாவட்டச் செயலாளர் பதவி இல்லையோ, அவர்களுக்கு அந்தந்தத் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் நேரடியாகக் கட்சிப் பணிகளையும், தொகுதிப் பணிகளையும் எந்தவித சுணக்கமும் இன்றி ஒருங்கிணைக்க முடியும் எனத் தலைமை கருதுகிறது.

இதுமட்டுமன்றி, கட்சியின் இந்த புதிய விரிவாக்கத் திட்டத்திற்காக மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து தவெக-வில் இணைய விருப்பம் தெரிவிக்கும் தகுதியான முக்கியக் கட்சிப் பிரமுகர்களையும், நிர்வாகிகளையும் புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்புகளுக்குப் பரிசீலிக்க விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவு கட்சியின் உட்கட்டமைப்பை வேகப்படுத்துவதுடன், பிற பாரம்பரியக் கட்சிகளின் கோட்டைகளில் விரிசலை ஏற்படுத்தும் ஒரு தந்திரோபாய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த மெகா திட்டத்தை ஒட்டுமொத்தமாக நடைமுறைப்படுத்தாமல், ஒவ்வொரு கட்டமாகச் செயல்படுத்தத் தவெக திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, தற்போதைய தேர்தல் கள நிலவரங்களின்படி கட்சி எந்தெந்த மாவட்டங்களில் சற்றே பலவீனமாக இருக்கிறதோ, அந்த 9 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு முதற்கட்டப் பணிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பலவீனமான பகுதிகளில் புதிய மற்றும் திறமையான நிர்வாகிகளை நியமிப்பதன் மூலம், அங்கு கட்சியின் செல்வாக்கை மிக விரைவாக உயர்த்த முடியும் என நம்பப்படுகிறது.