விசிக, இந்து முன்னணி அமைப்பினர் 23 பேர் கைது..

 
 விசிக, இந்து முன்னணி அமைப்பினர் 23 பேர் கைது..

பாளையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்து அமைப்பினர் போட்டி போட்டு தடையை மீறி போராட்டம் நடத்தியதை அடுத்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

பாளை பஸ் நிலையம் பகுதியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகிக்கப் பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி மற்றும்  இந்து முன்னணியினர் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப் போவதாக  அறிவித்தனர்.  இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அத்துடன்,  மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாளை பேருந்து  நிலைய பகுதிகளில்  மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.  இந்நிலையில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பேருந்து  நிலையம் அருகே,  பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை விநியோகித்தனர்.  

 விசிக, இந்து முன்னணி அமைப்பினர் 23 பேர் கைது..

இந்த  நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  இதனையடுத்து  உடனே அங்கு துணை காவல் ஆணையர் சீனிவாசன், உதவி ஆணையர்  பிரதீப், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உள்ளிட்ட  போலீஸார் விரைந்து சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் புத்தகங்களை வினியோகிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.  அத்துடன்  தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கரிசல் சுரேஷ் உள்பட 10 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே பாளை வ.உ.சி மைதானம் இந்து மக்கள் கட்சி தென்மண்டல செயலாளர் ராஜபாண்டியன், மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையிலான் கட்சியினரும்,   இந்து முன்னணி நிர்வாகிகளும்  திருமாவளவன் குறித்து துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதற்காக திரண்டனர். தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பிய 13 பேரையும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி  போலீசார் கைது செய்தனர்.