கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 சாராய வியாபாரிகள் கைது.. போலீஸ் அதிரடி..

 
arrest

 கடலூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் ஒரே நாளில் அதிரடியாக கைது  செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கிராமத்தில் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அதனை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த 16 பேருக்கும்  வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் 16 பேரும் முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர்  என அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். முன்னதாக கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  

liquor

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினார்.  கடலூர், சிதம்பரம், விருதாச்சலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.  அதன்படி  கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும்,  கடலூர் மாவட்டம் முழுவதும் சாராயம் விற்றதாக 88 பேரும் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.  போலீஸ் கடலூர் எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  இதில் 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.