217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தம்!!
தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நண்ட தூரப் பேருந்துகள் 30.12.2023 முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இங்கு 250 ஆம்னி பேருந்துகள் வரை நிறுத்துவதற்கான இடவசதிகள் உள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கென ஐந்து நடை மேடைகளும், ஒரே நேரத்தில் 77 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும், பணியில்லா பேருந்துகள் நிறுத்தம் வகையிலும் இட வசதி உள்ளது. புதியதாக வரும் பயணிகளுக்காக மக்கள் உதவி மையம் அமைக்கப்பட்டு தனியார் பேருந்துகளின் பெயர்கள் வரைமுறைப்படுத்தப்பட்டு எந்த பகுதியில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 145-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் பார்க்கிங் பேவிலும், இதர ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள்ளும் நிறுத்தப்பட்டுள்ளன. தென்மாவட்டம் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும். ரெட் ஹில்ஸ் மற்றும் பூந்தமல்லி வழியாக செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.