தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது..

தமிழகம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய சிறப்பு வேட்டையில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 8 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, தமிழக காவல்துறை கிடுக்குப்பிடி சோதனையை மேற்கொண்டுள்ளது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி , தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு காவல்துறையினருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை மற்றும் கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அந்த அடிப்படையில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருக்கும் முக்கிய கள்ளச்சாராய வியாபாரிகள் யார் என்பதும், இதற்கு முன்பு கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து முழு விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் தற்போது வரை சுமார் 203 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களில் 81 பேர் தற்போது வரை நீதிமன்றத்தில் ஆதரவு படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து இவர்களிடம் இருந்து சுமார் 6000 லிட்டர் அளவிலான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது 5,901 லிட்டர் கள்ள சாராயமும், 1,106 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை என்பது தொடர்ந்து நடைபெறும் எனவும், தமிழகம் முழுவதும் இந்த நடைமுறை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டு கள்ளச்சாராயம் என்பது இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்திருக்கிறது .