2026 தேர்தல் தமிழ்நாட்டை பாஜக - அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல் - மு.க.ஸ்டாலின் சூளுரை..!
திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சிக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: -
இங்க உட்கார்ந்திருக்க உங்க மனசுல, இப்போ என்ன ஓடிட்டு இருக்குனு, எனக்கு நல்லா தெரியுது… என்னடா, தலைவரும் சும்மா இருக்க மாட்றாரு.. நம்மையும் சும்மா இருக்க விடமாட்றாருனு சிலர் நினைப்பீங்க… சுணங்கி சும்மா இருந்துட்டா, நாம ஒரே இடத்துல தேங்கிடுவோம்! அது தேக்கம்! உழைப்பைக் கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிட்டே இருக்கணும்! அதுதான் இயக்கம்!
எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு (திமுக நிர்வாகிகள்), இந்த பயிற்சிக் கூட்டம் என்பது, எக்ஸாம்க்கு பிரிப்பேர் ஆகுற ஸ்டூடண்ட், எல்லாத்தையும் படிச்ச பிறகு, மீண்டும் ஒருவாட்டி ரிவிஷன் பண்ணுவாங்கள்ல அப்படி, எலக்ஷன் எனும் எக்ஸாம் முன்னாடி நாம் பண்ற ரிவிஷன்தான், இந்த பயிற்சிக் கூட்டம்.
நம்மோட இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம்! உங்களோட உழைப்பால, ஆறாவது முறையா ஆட்சிப் பொறுப்புல இருக்குற நாம, அடுத்து ஏழாவது முறையாவும் ஆட்சி அமைக்கணும்! அதுக்குத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம்!
2019-ஆம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்கள்லயும், மகத்தான வெற்றிகளை பெற்று வர்றோம்! நம்மோட வெற்றிகள், நம்ம எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கு! 2026 தேர்தல்லயும் நாமதான் வெற்றிபெற போறோம்… அன்னைக்கு நியூஸ் ஹெட்லைன்ஸ் என்னனா - “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!” இதுதான் ஹெட்லைன்ஸ்! இதை நான் ஆணவத்துல சொல்லல! உங்க உழைப்பு மேலயும் - ஆட்சியின் சாதனைகள் மேலயும் - தமிழ்நாட்டு மக்கள் மேலயும் வெச்சிருக்க நம்பிக்கைல சொல்றேன்!
நம்ம திராவிட மாடல் அரசோட திட்டங்களும், சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களோட உள்ளங்களிலும், இல்லங்களிலும் போய் சேர்ந்திருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களோட வாழ்க்கையில ஏற்றத்தையும், தொழில்துறையில மிகப்பெரிய பாய்ச்சலையும், கல்வித் துறையில முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியிருக்க நம்மோட திட்டங்களும் சாதனைகளும்தான் திராவிட மாடலின் அடையாளம்.
இந்தியாவுல எந்த மாநில அரசும் நம்மளவுக்கு சாதனைகள் செஞ்சிருக்க மாட்டாங்க, மீதமிருக்கும் சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றி தருவோம். நம்ம அரசு செஞ்ச சாதனைகளால் தான் நம்மால் தைரியமா எல்லார் வீட்டுக்கும் போய், ஆதரவு கேட்க முடிகிறது.
மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செஞ்சிட்டு இருக்க துரோகங்களை - நிதி ஒதுக்கீடுகளில் செஞ்சிட்டு இருக்குற வஞ்சகங்களை எடுத்துச் சொல்லி, தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்-னு தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு வீட்டுக்கும் போய் - இந்த மாபெரும் முன்னெடுப்ப வெற்றியடைய வெச்ச, கழகத்தின் ரத்த நாளங்களான உடன்பிறப்புகள் ஒவ்வொருத்தருக்கும், இந்த மேடையில இருந்து, என்னோட பாராட்டுகளை, இந்த சல்யூட் மூலமா சொல்லிக்குறேன்.
2021 தேர்தல் தமிழ்நாட்டை அ.தி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக - அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை - வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாகணும்.
பா.ஜ.க.வின் பகல்கனவு தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது. அவங்களுக்கும் அது நல்லா தெரியும். ஆனாலும், புதுசு புதுசா குறுக்குவழிகளைத் தேடுறாங்க.
எதிர்க்கட்சி தலைவரா இருக்குற பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியா இருந்த - அந்தக் கட்சியை, அமித்ஷாகிட்ட விழுந்து சரண்டர் பண்ணிட்டாரு. அந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பல; அவங்க கட்சிக்காரங்களும் விரும்பல.. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகல.. வி.சி.க. வர்றாங்க – கம்யூனிஸ்ட்டுகள் வர்றாங்க - காங்கிரஸ் வர்றாங்கனு அவரும் தினமும் சொல்லி பார்த்தார்.. ஆனா யாரும் அங்க போகல… மக்களும் அவர் பேசுறத நம்பத் தயாரா இல்ல..! மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்குற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில ‘தமிழ்நாடு தலைகுனியாது’-னு நான் உறுதி அளிக்கிறேன். தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள்-னு அதன் தலைவர் என்ற முறையில உறுதி ஏற்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு எதிரா கூட்டணி அமைச்சிருக்க அவரோட சந்தர்ப்பவாதத்தை மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லி, அவங்களோட நம்பிக்கையை பெற்று - அதை நம்ம கூட்டணிக்கான வாக்குகளா மாத்தணும். அந்த கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கு.
2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுக கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக - அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை - வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாகணும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்கணும். தமிழ்நாட்டை நிரந்தரமா ஆளும் தகுதி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் இருக்குனு நிரூபிக்கணும். கலைஞரின் உடன்பிறப்புகள், நினைச்சத செஞ்சு காட்டுவாங்க-னு புரிய வைக்கணும்.
என்னோட அழைப்பை ஏற்று, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும், இந்தச் செய்தியை உங்க மாவட்டத்துக்கு - நகரத்துக்கு - கிராமத்துக்கு – எடுத்துச் செல்லுங்கள். நான் சொன்னதை சொல்லுங்க. நான் கேட்டுக்கொண்டதை சொல்லுங்க. ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரிச்சதா சொல்லுங்க. நான் உழைக்கச் சொன்னதை சொல்லுங்க. நான் அவங்களதான் நம்பி இருக்கேன்-னு சொல்லுங்க. தொண்டர் இருக்குற தைரியத்துலதான் தலைவர் இருக்கார்னு மறக்காம சொல்லுங்க.
இவ்வாறு அவர் கூறினார்.


