2026 தேர்தல் களம்: சென்னையின் 16 தொகுதிகளுக்கான இறுதிப் பட்டியல் தயார்..!

 
1

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் நடந்து முடிந்து இறுதி பட்டியல் வெளியாகியது. 

இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தாருடைய பெயர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 192 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்படி நடைப்பெற்று முடிந்த சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி, சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண் வாக்காளர்கள், 14,64,344 பெண் வாக்காளர்கள் மற்றும் 829 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 28,30,936 வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சென்னை 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்

தற்போது வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, சென்னை மாவட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் - 1,95,856, பெரம்பூர் - 2,22,792, கொளத்தூர் - 2,07,251, வில்லிவாக்கம் - 1,59,764, திருவிக நகர் 1,78,793, எழும்பூர் - 1,34,879, ராயபுரம் - 1,56,931, துறைமுகம் - 116896, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - 1,63,866, ஆயிரம் விளக்கு - 1,53,903, அண்ணா நகர் - 1,81,402, விருகம்பாக்கம் - 196536, சைதாப்பேட்டை - 2,00,697, தியாகராய நகர் - 1,54,943, மயிலாப்பூர் 1,94,731, வேளச்சேரி - 2,11,691 என மொத்தமாக 28,30,936 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதில் குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,16,896 வாக்காளர்களும், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 2,22,792 வாக்காளர்களும் உள்ளனர்.