சென்னையில் நாளை 200 மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

 
ma Subramanian

நாளை சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழறிஞர் க. நெடுஞ்செழியன் உடலுக்கு இன்று காலை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து  அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது, “தமிழறிஞர் நெடுஞ்செழியன் தமிழக முதல்வர் ஸ்டாலின் கையால் கடந்த மாதம் செம்மொழி பட்டம் பெற்றார். நெடுஞ்செழியன் அவர்களுக்கு நீண்ட நாட்களாக நீரிழிவு நோய் ,சிறுநீர் பிரச்சனை இருந்து வந்தது. முன்னதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

rain

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் எங்கு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும். இந்த முகாமில் காய்சல், சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு மாத்திரை வழங்கப்படும். மழைநீர் தேங்கி இருந்த அனைத்து மருத்துவமனைகளிலும் நீர் அகற்றப்பட்டது. நேற்று பெய்த மழையில் ராயபேட்டை மருத்துவமனையில் புகுந்த மழை நீரையும் உடனையாக மருத்துவமனை ஊழியர்களே அகற்றியுள்ளனர்.

Medical Camp

மேலும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி, தேவைப்பட்டால் பள்ளிகள் நாளை திறக்கும் போது பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் அகற்றிய பிறகு, நடமாடும் வாகனம் மூலம் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் செயல்படுத்தப்படும்.  மருத்துவமனை வளாகங்களில் கடந்த மழையின் போது தண்ணீர் தேங்கியது. இந்த வருடமும் செங்கல்பட்டு, அன்னியூர் போன்ற மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், தற்போது விரைவாக அகற்றப்பட்டுவிட்டது. பெரிதளவில் மருத்துவமனைகளில் தண்ணீர் அதிகளவில் நிற்கவில்லை. ராயப்பேட்டை மருத்துவமனையில் மெட்ரோ பணி நடைபெற்று வருவதால், மெட்ரோ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தேங்கிய மழைநீரை அகற்றிவிட்டனர்” என்று தெரிவித்தார்.