200 பேருந்துகள், 400 கார்கள்... 20,000 பேருக்கு தடபுடல் விருந்து! மாமல்லபுரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் தவெக-வின் பிரம்மாண்ட இணைப்பு விழா!

 
1

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. அதைத் தொடர்ந்து, அதிமுக கட்சியின் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், அண்ணா தொழிற்சங்கத்தினர் என தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.

அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இணைந்திருப்பது அதிமுக தலைமை அதிர்ச்சியடைய செய்தது. இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பயணிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா இன்று  (ஜூலை 02) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 4,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு வெளியே பெரிய அளவிலான எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 20,000 பேருக்கு தடபுடல் விருந்தும் வழங்கப்படவுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள், 4 மாவட்ட செயலாளர்கள், 7 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நான்கு பாராளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய கழகச் செயலாளர்கள், 15 நகரக் கழகச் செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் என 200 பேருந்துகள், 400 கார்களில் சென்னை வந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்டச் செயலாளர்கள் வைரமுத்து, இளம்பை தமிழ்ச்செல்வன், ஒரத்தநாடு சேகர், திருச்சி சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மான்ராஜ், ராம்குமார், ராஜவர்மன், சதன் பிரபாகர், திருஞானசம்பந்தம், சுந்தர்ராஜன் ஆகியோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர்.

இதனிடையே, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணமுரளி, எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பதவியை ஏற்க முடியாது எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் வழங்கியுள்ளனர். இது அதிமுக தலைமையை மேலும் சோர்வடையச் செய்துள்ளது.