குழந்தைக்கு பாலில் எறும்பு மருந்து கொடுத்த தந்தை

 
baby leg

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழகோடன்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி தர்மராஜ். இவருக்கும் பரப்பாடி அருகே உள்ள பாண்டிச்சேரியை சேர்ந்த அபிஷா (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு எட்வின் (3), செல்லம்(2) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தர்மராஜின் பெற்றோர்களுக்கு சொந்தமாக வீடு, தோட்டம் உள்ளது. இதில் தர்மராஜ்க்கு இதுவரை பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக அவருக்கும், அவரது பெற்றோர்களுக்கும் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் தர்மராஜின் தாயார் செல்வகனிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அபிஷா, மாமியார் வீட்டிற்கு சென்று வீட்டு வேலைகள் செய்து கொடுத்தார். இது தர்மராஜ்க்கு பிடிக்கவில்லை. இதையொட்டி அவர் மனைவியிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவரது 2 வது ஆண் குழந்தை செல்லத்திற்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அபிஷா, தர்மராஜிடம் பணம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அபிஷே குளிப்பதற்காக அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார். திரும்பி வந்த போது, ஆண் குழந்தை செல்லம் அழுதபடி இருந்தது. இதுபற்றி கணவர் தர்மராஜிடம் கேட்டதற்கு அவர் குழந்தைக்கு எறும்பு பொடியை பாலில் கலந்து கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அபிஷா உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக முனைஞ்சிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது தர்மராஜ் தானும் எறும்பு பொடியை குடித்து விட்டதாக கூறி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அங்கிருந்து தர்மராஜும், அவரது குழந்தை செல்லமும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே தர்மராஜ் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார். இதுபற்றி அபிஷா மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்த தர்மராஜை கைது செய்தார்