குழந்தை மீது மயங்கி விழுந்த தாய்- 2 வயது குழந்தை உயிரிழப்பு
கும்பகோணம் அருகே வளையப்பேட்டை கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க சுபா மயங்கி, அவரது 2 வயது பெண் குழந்தை மீது விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். இவருடைய மனைவி சுபா(வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வயதில் பெண் குழந்தை தங்க மித்ரா இருந்தது . சுபா இன்று மதியம் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டு ஆட்டோவிற்கு காத்திருந்ததாகவும், இந்த நிலையில் சுபா வீட்டிற்கு வந்த ஆட்டோ டிரைவர் நீண்ட நேரமாக காத்திருந்தும் அவர் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோ டிரைவர் வீட்டின் உரிமையாளரிடம் கூறி பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது சுபா மற்றும் குழந்தை ஆகிய 2 பேரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
உடனே அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் தாய் சுபா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சுபா கடந்த சில மாதங்களாக மன நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் , சுபா மயங்கி கீழே இருந்த குழந்தை மீது விழுந்ததில் குழந்தை இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.