ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி!

கன்னியாகுமரியில் ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான அருமனை பகுதியை அடுத்த செறுவல்லூர் பகுதியை சார்ந்தவர் அனில் - அருணா தம்பதியினர். அனில் மாங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு அனிருத் என்று நான்கு வயதில் ஒரு மகனும், ஆரோன் என்று இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர். அனில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு மரத்திலிருந்து தவறி விழுந்து படுத்த படுக்கையாக உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் அருணா, கணவனுடன் இருக்கும் போது, அவர்களது 2 -வயதான மகன் ஆரோன் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தார். இதனிடையே சமையல் அறையில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து ஜூஸ் என நினைத்து குடித்துள்ளார்.
குடித்த சில நிமிடத்தில் ஆரவனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, வாந்தி எடுத்துள்ளார். மகனின் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், மகனின் உடலில் மண்ணெண்ணெய் வாசனை இருப்பதால் பாட்டிலை எடுத்து விளையாடி இருப்பான் என்று நினைத்துள்ளார். பின்னர் ஒரு சில நிமிடங்களிலேயே திடீரென மீண்டும் குழந்தை வாந்தி எடுத்துள்ளது. அப்போது தான் ஆரோன் மண்ணெண்ணெய் குடித்ததை தாயால் புரிந்து கொள்ளப்பட்டது. உடனே தாயின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதைதொடர்ந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை ஆரோன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.