உ.பி-யில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு..!!

 
Q
ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு தலைமையேற்கும் வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் டி.பிரகாஷ். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பொது நிர்வாகத்தில் எம்.ஏ., எம்.பில். பட்டமும் பெற்றார். பேராசிரியர் பணிக்கு முயன்ற இவர், மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வை எழுதினார். அதில் 1994ல் அவரது முதல் முயற்சியிலேயே ஐபிஎஸ் கிடைத்தது. உ.பி.மாநில பிரிவில் பணி ஒதுக்கப்பட்டது.
தற்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் உ.பி. ரயில்வே ஏடிஜிபியாக அவர் சிறப்புடன் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவருக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் உ.பி.யில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் மற்றொரு தமிழர் எல்.வி ஆண்டனி தேவ் குமார். திருநெல்வேலி, திசையன்விளையை சேர்ந்த இவர், முதுகலையுடன் சட்டமும் பயின்றவர்.
யுபிஎஸ்சி தேர்வில் தீவிரம் காட்டி வந்த இவருக்கு 1994-ல் ஐபிஎஸ் கிடைத்தது. உ.பி. மாநிலப் பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் பணியில் நேர்மை காரணமாக எவரும் இல்லாத வகையில் அதிக முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தார். உளவுத் துறையின் ஆக்ரா மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை ஆண்டனி வகித்துள்ளார்.
ராமர் கோயில் பாதுகாப்புக்காக புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு படை தலைமை அதிகாரியாகவும் இருந்து அதை அமைத்தார். ஏடிஜிபியான ஆண்டனி தற்போது, மாநில காவல்துறை தலைமையகத்தின் ரூல்ஸ் அண்ட் மேனுவல்ஸ் பிரிவின் தலைமை அதிகாரியாக உள்ளார். இவருக்கும் டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் தற்போது பொறுப்பு டிஜிபியாக ராஜீவ் கிருஷ்ணா உள்ளார்.
எனினும், டிஜிபி நிரந்தரப் பணிக்கு என உரிய தகுதியும், அதிகத்திறமையும் வாய்ந்தவரை அமர்த்த முதல்வர் யோகி முயற்சிக்கிறார். இதற்கானத் தேர்வுப் பட்டியலில் பிரகாஷ் மற்றும் ஆண்டனி பெயர்களும் உள்ளன. உ.பி. அரசு சார்பில் இறுதியாக 3 அதிகாரிகள் கொண்ட பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதிலும் இடம்பெற்று, ஒரு தமிழரே உ.பி.யின் டிஜிபியாகும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 32 அதிகாரிகள் உ.பி.யில் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலருக்கும் முதல்வர் யோகி முக்கியத்துவம் அளித்து வருகிறார். டிஜிபி அந்தஸ்துக்கு உயர்ந்த பிரகாஷ், ஆண்டனிக்கான உத்தரவையும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அதில் இயக்குநராகப் பணியாற்றும் தமிழரான ஏ.தினேஷ்குமார் வெளியிட்டுள்ளார்.