தலித் மாணவரை சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம்- 2 மாணவர்கள் சஸ்பெண்ட்

 
Students

திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் பயிலும்  மாணவருக்கு சக மாணவர்கள் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்த விவகாரத்தில் இரண்டு மாணவர்களை ஓர் ஆண்டிற்கு சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு  பகுதியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சட்டம் பயின்று வருகின்றனர். 2012-2013 கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவர் ஒருவருக்கு கடந்த 6 ம் தேதி அவரது வகுப்புத் தோழர்கள் இருவர் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்து அதனை, மறுநாள் வகுப்பறையில் கூறி அந்த மாணவரை இரு மாணவர்களும் கிண்டல் செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் வாய்மொழியாக புகார் அளித்தார். ஆனால் அந்த மாணவர் மறுநாளே புகாரை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ராக்கிங் தொடர்பாக புகார் அளித்ததால் அதை முழுமையாக விசாரிக்கப்படும் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து  3 உதவி பேராசிரியர்கள் கொண்ட குழு, அந்த மாணவருக்கு உண்மையிலேயே சிறுநீர் கலந்த குளிர் பானம் கொடுக்கப்பட்டதா? புகாரின் உண்மை தன்மை என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.  அந்த குழுவின் விசாரணையில் மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது உறுதியானது. 

Image

அதனைத் தொடர்ந்து அந்த குழுவின் அறிக்கையை 9 பேர் அடங்கிய பல்கலைக்கழக ராக்கிங் தடுப்பு குழுவிடம் அளித்தனர். அதனடிப்படையில் அந்த மாணவர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்யவும் அவர்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் அந்த குழு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு மாணவர்களையும் ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் நாகராஜ் உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் ராம்ஜி நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.