நாட்டு வெடிகுண்டுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் கைது! சென்னையில் பரபரப்பு

 
Arrested

சென்னை அடுத்த போரூரில் நாட்டு வெடிகுண்டுடன் பதுங்கியிருந்த இரண்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

போரூர் அடுத்த பாரதியார் தெரு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தவர் தினேஷ்(என்ற)பீடி தினேஷ்(23), இவரது நண்பர் அஜீம்(என்ற) முகமது அஜீம்(22), இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக இந்த வீட்டில் வாடகைக்கு தங்கி வந்தனர். இன்று நுங்கம்மாக்கம் தனிப்படை போலீசார் இந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தபோது அவர்கள் வீட்டில் கத்திகள், ஒரு கிலோ கஞ்சா மற்றும் ஐந்து நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து அதே இடத்தில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களுடன் விசாரணை மேற்கொண்டதில் தினேஷின் நண்பரான குள்ளகுமார்(21), என்பவரை 2 மாதத்திற்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் வைத்து சாம்பார்(என்ற), தனசேகர் தரப்பினர் கொலை செய்ததாகவும் இந்த கொலைக்கு தனசேகரை பழி வாங்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து வீட்டில் வைத்து கொண்டு சமயம் பார்த்து தீர்த்து கட்டுவதற்கு இந்த வீட்டில் இருவரும் தங்கியிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

தினேஷ் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் முகமது அஜீம் மீதும் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து இருவரையும் போரூர்  போலீசாரிடம் ஆஜர்படுத்தி விட்டு பின்னர் விசாரணைக்காக இருவரையும் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஐந்து நாட்டு வெடிகுண்டுகளையும் பாதுகாப்பான முறையில் போலீசார் எடுத்து சென்றனர். அந்த வீட்டைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது